சிறியதை பெரியது விழுங்கும். பெரியதை அதனினும் பெரியது விழுங்கும். இது ஒரு முடிவிலி. தொடர்ந்து கொண்டே இருக்கும்.
ஆலயங்களில் வாசலில் இருப்பவர்கள் கேட்கும் பிச்சையை நாம் கொடுத்தால் நாம் கேட்கும் பிச்சையை ஆண்டவன் தீர்த்து வைப்பார். கிட்டதட்ட எல்லா மதங்களின் சாரம்சம் இதுதான். அந்த நம்பிக்கையில் தான் அவர்கள் ஆலயத்தின் முன்னால் நிற்கிறார்கள் நம்மை நம்பி.
ஒரு மனிதன் சகமனிதனுக்கு உதவுதல் என்பது இயல்பான ஒன்று. என்னைப் பொறுத்துவரை அதுதான் வாழ்வியல் அடிப்படை. யாரோ யாருக்கோ உதவிக்கொண்டே இருக்கிறார்கள் உலகில். இதில் இறைக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால் இறை புகுத்தப்படுகிறது. காரணம் சொர்கம், மறுமை, செய்த தவறுகளுக்கு மன்னிப்பு என அவைகளுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது. விளைவு மனிதம் தாண்டி இறைவன் பெயரால் தர்மம் செய்ய நாம் அழைக்கப்படுகிறோம்.
உன்னால் முடியும் தம்பி...படத்தில் ஒரு குருட்டு கிழவியின் கையில் இருந்து வாழைப்பழம் கீழே விழுந்துவிடும். வாயில் மந்திரம் முணுமுணுத்துக்கொண்டே நகரும் ஒரு இளைஞன் அவளுக்கு அந்த பழத்தை எடுத்த தர உதவமாட்டான். காரணம் அவன் அதனினும் பெரிய தர்மமான மந்திரத்தை முணுமுணுத்துக்கொண்டு இருக்கிறான். இதுதான் இங்கே போதிக்கப்படுகிறது.
சாலையில் உங்கள் முன்னால் கையெந்தி நிற்கும் முதியவருக்கு ஒரு ரூபாய் கொடுக்கலாம். ஆனால் ஏற்கனவே உங்கள் பிறந்தாளுக்கு ஏதோ ஒரு ஆசிரமத்தில் நீங்கள் தர்மம் செய்திருக்கிறீர்கள். அது உங்கள் இறைப்பாதையை கொஞ்சம் நீட்டித்திருக்கும். அதுபோதும் என கடந்து செல்வீர்கள். காரணம் உங்கள் முன்னால் நிற்கும் எளிய மனிதனின் குரலைவிட, ஒட்டிப்போன வயிறைவிட... அதை செய்தால் கிடைக்கும் புண்ணியம் உங்கள் மூளையில் உறைந்திருக்கிறது. ஒரு நாள் தர்மம் செய்து அதை கடவுளின் கணக்கில் வரவு வைக்கும் சூத்திரங்கள் உங்களுக்கு உங்கள் மதம் சொல்லிக்கொடுத்திருக்கிறது. அதையே நாமும் தேர்வு செய்துகொள்கிறோம். விளைவு எல்லா பக்கமும் ஏதோ ஒரு அழுகுரல் கேட்கிறது. நாமோ வேதம் சொல்கிறோம். பாங்கு ஒதுகிறோம். பிரேயர் செய்கிறோம். தியானம் செய்கிறோம்.
அப்பொதெல்லாம் நான் யோசிப்பேன் கடவுளின் குறித்து வைக்கும் திறன் ஒருநாள் காலவதியானல்... என்ன செய்வார்கள் இவர்கள்... ? ஒரு மனிதன் சக மனிதனுக்கு உதவ மதங்கள் தேவையில்லை.. அவைகளின் போலி போதனைகள் தேவையில்லை.. நீங்களும் அவரை போலவே ரத்தமும் சதையும் விரவி இருக்கும் மனிதன் என்ற எண்ணம் போதும். அது இல்லாத போது மதநிறுவனங்களின் போதனைகள் வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக